வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர் அ.தி.மு.க. குற்றச்சாட்டு


வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர் அ.தி.மு.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 April 2019 10:15 PM GMT (Updated: 20 April 2019 8:56 PM GMT)

வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் நடந்த தேர்தலின்போது ஆளும் காங்கிரஸ் அரசின் அத்துமீறல்களை புதுச்சேரி தேர்தல்துறை வேடிக்கை பார்த்தது. அவர்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் ஜாதி, மத ரீதியாக பிரசாரம் செய்தனர். தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு இடையிலானது என்பதை புறந்தள்ளி 2 மதங்களுக்கு இடையிலானது என்பதைப்போல் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் வாக்காளர்களிடம் தங்களது பிரசாரம் மூலம் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.

இந்த செயல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாகும். பல மதத்தினர் வசிக்கும் புதுவையில் மக்களிடம் மத வேறுபாடுகளை காங்கிரஸ் பரப்பி வருகிறது. இந்த செயலை அ.தி.மு.க. கண்டிக்கிறது. இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பதால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புதுச்சேரி தேர்தல் துறை புகார் அளிக்கவேண்டும்.

இதுபோன்று வட மாநிலங்களில் பிரசாரம் செய்திருந்தால் அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும். புதுச்சேரி தேர்தல் துறை இதுகுறித்து புகார் அளிக்காவிட்டால் அ.தி.மு.க. புகார் அளிக்கும். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சி வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தது. அதை தேர்தல் துறை அதிகாரிகள் ஏன் பிடிக்கவில்லை.

ஆளுங்கட்சிக்கு பயந்து ரங்கசாமியின் வீட்டிலும் சோதனை நடத்தினர். முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தியிருந்தால் அவர்கள் தாங்கள் யார்? என்பதை தேர்தல் துறை அதிகாரிகளுக்கு காட்டியிருப்பார்கள்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story