பிரார்த்தனைக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி சாவு டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம்
ஓசூர் அருகே பிரார்த்தனைக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலியானார். டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 7 பேர் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி, ஓசூரிலுள்ள தேவாலயத்திற்கு ஒரு வாடகை காரில் சென்றனர். காரை அதே கிராமத்தை சேர்ந்த குண்டப்பா(வயது28) என்பவர் ஓட்டி சென்றார். தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்து விட்டு அவர்கள் மீண்டும் தங்கள் கிராமத்திற்கு காரில் திரும்பினர்.
கெலவரப்பள்ளி அணையை தாண்டி, மாரசந்திரம் அருகில் கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி, எல்லம்மா (60) என்ற மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் கார் டிரைவர் குண்டப்பாவின் பாட்டி ஆவார். மேலும் காரில் பயணம் செய்த சந்திரா(28), மற்றொரு எல்லம்மா(30), பிரதீப்(17), பானு(13), வேணி(6) மற்றும் டிரைவர் குண்டப்பா ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் அங்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் இறந்த எல்லம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி பிரார்த்தனைக்கு சென்று திரும்பிய போது கார் கவிழ்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story