பொள்ளாச்சி அருகே, இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி கொலை - மகன் கைது


பொள்ளாச்சி அருகே, இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி கொலை - மகன் கைது
x
தினத்தந்தி 21 April 2019 10:45 PM GMT (Updated: 21 April 2019 5:48 PM GMT)

பொள்ளாச்சி அருகே இரும்பு கம்பியால் தொழிலாளியை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 56), தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (50). இவர்களுடைய மகன்கள் ஸ்ரீதர் (30), ராஜலிங்கம் (28). இவர்களில் ஸ்ரீதருக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டு கோவையில் தங்கி தச்சு வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தேர்தலையொட்டி ஓட்டுப்போடுவதற்காக ஸ்ரீதர் ஊருக்கு சென்றுள்ளார். அங்கு ராஜலிங்கம் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர் ஸ்ரீதரிடம், நீ வேலைக்கு செல்லாமல் அடிக்கடி வீட்டுக்கு வந்து விடுகிறாய், வேறு திருமணம் செய்து கொள்ளாததால் எனக்கு திருமணம் தடைபடுகிறது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாய்த்தகராறு முற்றவே அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ராஜலிங்கம் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஸ்ரீதரை சரமாரியாக தாக்கினார். இதைபார்த்த தந்தை ஜோதிமணியும், தாய் ஈஸ்வரியும் தடுக்க முயன்றனர். அவர்களையும் ராஜலிங்கம் தாக்கி உள்ளார். இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜோதிமணியின் நிலை கவலைக்கிடமானது.

இதனைதொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே ராஜலிங்கம் தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நா.மூ.சுங்கத்தில் சுற்றித்திரிந்த ராஜலிங்கத்தை கைது செய்தனர்.

Next Story