உப்புக்கோட்டை அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


உப்புக்கோட்டை அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 6:19 PM GMT)

உப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்புக்கோட்டை,

உப்புக்கோட்டை அருகே டொம்புச்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேளாண்மை விரிவாக்க மையம், அரசு நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

டொம்புச்சேரி பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை முறையான அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டதாகக்கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறக்க இருப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதி பொதுமக்கள் டொம்புச்சேரி பஸ் நிறுத்தம் பகுதியில் திரண்டு வந்தனர். பின்னர் அங்கு சாலையோரத்தில் அமர்ந்து டாஸ்மாக் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று கோஷமிட்டனர். அவர்கள் கையில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்கள் எழுதிய தட்டிகளை ஏந்தியிருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்க உரிய அனுமதி பெற வேண்டும். எனவே அந்த டாஸ்மாக் மதுக்கடையை திறக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story