மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகினர். சேலத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து மக்களை வாட்டி வதைத்தது.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி சீதோஷ்ண நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சேலம் உள்பட பல்வேறு இடங்களில் திடீரென கோடை மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 19-ந் தேதி 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எடப்பாடி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை, நேற்று காலை வரையிலும் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேட்டூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 3 மணிநேரத்துக்கு மேல் நீடித்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இதேபோல், சங்ககிரி, காடையாம்பட்டி, ஏற்காடு மற்றும் சேலம் மாநகரிலும் பரவலாக கனமழை பெய்தது. ஏற்காட்டில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் கடும் குளிர் நிலவியது. இதனால் ஏற்காடு மலை கிராமங்களில் ரம்மியமான சூழ்நிலை காணப்பட்டது.

சேலத்தில் அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சேலத்தில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ணநிலை காணப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஓமலூர்-66, மேட்டூர்-64.8, எடப்பாடி-60.4, சங்ககிரி-28, காடையாம்பட்டி-28, ஆனைமடுவு-26, ஏற்காடு-13.8, சேலம்-12.2, பெத்தநாயக்கன்பாளையம்-3, கரியக்கோவில்-2, ஆத்தூர்-1.1.

Next Story