திருடுவதற்காக வீட்டுக்குள் புகுந்த வாலிபர் சிக்கினார் தப்பிக்க முயன்றபோது மாடியில் இருந்து விழுந்து காயம்
புதுவையில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சிக்கினார். அவர் தப்பிக்க முயன்றதில் மாடியில் இருந்து விழுந்து காயம் அடைந்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சின்னசுப்புராயப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 40). நேற்று மாலை இவரது வீட்டின் உள்ளே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திருடும் நோக்கில் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடாஜலபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வாலிபரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அவர்கள் வெளியே வந்துவிட்டனர். பின்னர் இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் வெங்கடாஜலபதியின் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அதற்குள் அந்த வாலிபர் வீட்டின் உள்ளே உள்ள படிக்கட்டின் மூலமாக வீட்டின் மாடிக்கு சென்று விட்டார். போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். உடனே அந்த வாலிபர் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயற்சி செய்தார். இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து மயங்கிவிட்டார்.
போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story