அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்


அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 22 April 2019 3:45 AM IST (Updated: 22 April 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி (தற்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) எம்.எல்.ஏ. ஆனார். எனினும் அதன் பிறகு கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சியில் முகாமிட்டு அ.தி.மு.க., தி.மு.க. உள்பட கட்சியினர் தேர்தல் களப்பணியில் தீவிரமாக இறங்கி விட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பிலும் விரைவில் வேட்பாளர் அறிவிப்பு தலைமை கழகத்திலிருந்து வரும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும், அரவக்குறிச்சியில் இடைத்தேர்ல் வருவதால் கரூர் மாவட்டத்தில் அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

இன்று முதல் வேட்புமனு தாக்கல்

இந்த நிலையில் அரவக் குறிச்சி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (திங்கட் கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது. அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 30-ந்தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் வருகிற மே மாதம் 2-ந்தேதி ஆகும். அதன்பிறகு வாக்குப்பதிவு மே 19-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23-ந்தேதியும் நடைபெறு கிறது.

இந்த நிலையில் அரவக் குறிச்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலால் உதவி ஆணையர் மீனாட்சி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக அரவக்குறிச்சி தாசில்தார் ஈஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனிபிரிவு தாசில்தார் அமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிரசார வியூகம்

தற்போது அரவக்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 105 டிகிரிக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருவதை போல அரவக்குறிச்சியில் அனல் பறக்கும் வகையில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவும் பல்வேறு வியூகங்களை கட்சியினர் அமைத்து வருகின்றனர். ஏனெனில் மே 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயம் செய்வதில் இடைத்தேர்தல் வெற்றி தான் முக்கிய பங்காற்றும். இதனை கருத்தில் கொண்டு பிரதான கட்சிகளை சேர்ந்தவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு உதவியுடன் இணையதள பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட ஆயத்தமாகி வருகிறார்கள். மேலும் அரவக்குறிச்சியில் பணப் பட்டுவடாவை தடுக்க வழிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும் தேர்தல் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

Next Story