மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 8:56 PM GMT)

மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மணப்பாறை,

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு நடைபெற்றது. காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளுடன் வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு நீண்ட வரிசையில் நின்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூத்தட்டுகளை வழங்கி சாமி கும்பிட்டனர்.

பின்னர் கோவிலின் சார்பில் அலங்கரிக்கப்பட்ட பூ ரதம் மணப்பாறை பஸ் நிலையம் முன்பு உள்ள முனியப்பசாமி கோவில் முன்பு நிறுத்தப்பட்டது. மணப்பாறை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மனின் பூ ரதம் கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து முனியப்பசாமி கோவில் முன்பிருந்து கோவில் வழக்கப்படி மேளதாளங்கள் முழங்க கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் வே.பிரபாகர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் முன்செல்ல, நள்ளிரவு 12 மணிக்கு வேப்பிலை மாரியம்மன் கோவில் பூ ரதம் கோவிலுக்கு சென்றது. அதைத்தொடர்ந்து அனைத்து பகுதி பூ ரதங்களும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தன. நள்ளிரவில் வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பூ ரதம் சென்ற வழி நெடுக சாலையில் இருபுறமும் திரளான பக்தர்கள் நின்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதனால் மணப்பாறை நகரே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சர்மு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சித்திரை திருவிழாவின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது. 13-ந்தேதி காலை பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சியும், மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

Next Story