பொன்னமராவதி சம்பவம், மாவட்டத்தில் 3 இடங்களில் போராட்டம்


பொன்னமராவதி சம்பவம், மாவட்டத்தில் 3 இடங்களில் போராட்டம்
x
தினத்தந்தி 22 April 2019 4:15 AM IST (Updated: 22 April 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் 3 இடங்களில் போராட்டம் நடந்தது.

அருப்புக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அவதூறு செய்தி பரப்பியதை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டியில் மதுரை செல்லும் சாலையில் அமர்ந்து மணிகண்டன் என்பவரது தலைமையில் மறியல் நடந்தது. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

சம்பவம் அறிந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகமது அஸ்லாம் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதன் பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் மதுரையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலை வழியாக அருப்புக்கோட்டைக்கு திருப்பி விடப்பட்டன. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல காரியாபட்டி, அச்சம்பட்டி, கரிசல்குளம், பாம்பாட்டி, மந்திரி ஓடை, அச்சங்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு காரியாபட்டி முக்கு ரோட்டில் இருந்து போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக வந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். விருதுநகர் அருகே சிவகாசி சாலையில் மத்தியசேனை கிராமத்தை சேர்ந்தோரும் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story