நயினார்கோவிலில் இருதரப்பினர் மோதல், விவசாயி கொலை - 4 பேருக்கு அரிவாள் வெட்டு


நயினார்கோவிலில் இருதரப்பினர் மோதல், விவசாயி கொலை - 4 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 22 April 2019 4:00 AM IST (Updated: 22 April 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவிலில் இடத்தகராறு காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கம்பால் தாக்கியதில் விவசாயி கொலை செய்யப்பட்டார். 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் கருப்பையா. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான திருநகலிங்கம் மகன் முருகன் என்பவருக்கும் பாதை இடம் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. நேற்று காலை மீண்டும் இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து சென்றனர். இந்த நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த முருகனின் மைத்துனர் வரவணி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன் (வயது40) என்பவர் நயினார்கோவிலுக்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டாராம்.

இதையடுத்து நயினார்கோவில் கடை வீதி பகுதியில் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அப்போது கம்பால் தாக்கியதில் கோவிந்தன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இந்த மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த அனைவரும் உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்த கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நயினார்கோவில் கடைவீதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story