அவதூறு வீடியோ பரப்பியவர்களை கைது செய்யக்கோரி நத்தத்தில் 2-வது நாளாக சாலை மறியல்


அவதூறு வீடியோ பரப்பியவர்களை கைது செய்யக்கோரி நத்தத்தில் 2-வது நாளாக சாலை மறியல்
x
தினத்தந்தி 21 April 2019 10:45 PM GMT (Updated: 21 April 2019 11:46 PM GMT)

அவதூறு வீடியோ பரப்பியவர்களை கைது செய்யக்கோரி நத்தத்தில் 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நத்தம்,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் குறித்தும் 2 பேர் அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டனர். அவர்களை கைது செய்யக்கோரி நத்தம் அருகே வத்திப்பட்டியில் நேற்று முன்தினம் முத்தரையர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்றும் 2-வது நாளாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வினோத், ஜஸ்டின்பிரபாகரன், நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் வடமதுரையில் வீரமுத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த சங்கத்தினர், அவதூறு வீடியோ பரப்பியவர்களை கைது செய்யக்கோரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் அவதூறு வீடியோ பரப்பியவர்களை கைது செய்யக்கோரி வீர முத்தரையர் முன்னேற்ற சங்க வேடசந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் மகாமுனி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Next Story