இலங்கை சிறையில் உள்ள மாணவர்கள் உள்பட 8 மீனவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம் - மீனவர்கள் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள 2 மாணவர்கள் உள்பட 8 மீனவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்,
கடந்த ஜனவரி 12–ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், சாம்டேனியல், துரைப்பாண்டி என்ற 2 மாணவர்கள் உள்பட 8 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 10– வது முறையாக ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற மே மாதம் 6–ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தகவல் மீனவர்களின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. ஏற்கனவே இவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்களின் உறவினர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர். அதிகாரிகளின் சமரசத்தால் அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்தது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களின் வீடு உள்ள தங்கச்சிமடம், விக்டோரியா நகர் பகுதியில் மீனவர்கள் கூட்டமாக கூடி அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக அறிவித்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ், இன்ஸ்பெக்டர் தேவி, மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 6–ந்தேதி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா மற்றும் மீனவர்கள் கூறும் போது, 3 மாதத்திற்கு மேலாக இந்த மாணவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வருகிற 6–ந்தேதி விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 26 பேர் இன்னும் இங்கு அனுப்பி வைக்கப்படவில்லை. எனவே இவர்களை விடுதலை செய்யவும், ஏற்கனவே அங்குள்ள மீனவர்களை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை விடுதலை செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.