சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் செருப்பால் சாலையில் அடித்து போராட்டம் செய்தனர்.
தேனி,
சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறு பரப்பும் வீடியோ வெளியானது. இதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் வெடித்தது. இந்தநிலையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு குறிப்பிட்ட சமூகத்தின் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்தனர்.
அப்போது அவர்கள் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும், தங்கள் சமுதாய பெண்களையும் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி செருப்பால் சாலையில் அடித்து போராட்டம் நடத்தினர். மேலும் அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் அங்கு வந்தார். அவர், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர்கள், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தங்கள் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைத் தளத்தில் அவதூறாக பேசிய நபர்களை போலீசார் இன்னும் கைது செய்யாமல் உள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி கருத்துகளை வெளியிட்ட நபர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.
Related Tags :
Next Story