பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை - கோபால்பட்டியில் துடைப்பத்துடன் சாலை மறியல்
பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. அதேபோல் கோபால்பட்டியில் துடைப்பத்துடன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், சமூக வலைத்தளங்களில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களையும், பெண்களையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அந்த சமுதாயத்தினரிடம் இருந்து மனுக்களை வாங்கவில்லை. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார்மனு பெட்டியில் மனுக்களை போட்டுச்செல்லும்படி கூறினர். இதையடுத்து அந்த சமுதாயத்தினர் தங்கள் கோரிக்கை மனுக்களை புகார்மனு பெட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதே போன்று சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அந்த சமூகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் துடைப்பம், செருப்புகளை பிடித்துக்கொண்டு அவதூறு வீடியோ வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொன்னமராவதி சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ யாருடைய செல்போனில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதில் அஞ்சுகுளிப்பட்டி, ஒத்தக்கடை, கொரசினம்பட்டி, செடிப்பட்டி, புவகிழவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story