8 வழிச்சாலை திட்டத்தை பரிசீலிப்போம் என பேச்சு: காங்கிரஸ் கட்சி மாநில தலைவருக்கு விவசாயிகள் கண்டனம்


8 வழிச்சாலை திட்டத்தை பரிசீலிப்போம் என பேச்சு: காங்கிரஸ் கட்சி மாநில தலைவருக்கு விவசாயிகள் கண்டனம்
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 2019-04-23T00:14:11+05:30)

8 வழிச்சாலை திட்டத்தை பரிசீலிப்போம் என கூறிய காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சேலம், 

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், மரங்கள் உள்ளிட்டவை அழியும் என தெரிவித்து 8 வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடப்பட்ட அளவீடு கற்களை பிடுங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 8 வழிச்சாலை திட்டத்தை பரிசீலிப்போம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார். இதற்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று விவசாயிகள் அடங்கிய, 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு இயக்கமான உழவர் உற்பத்தியாளர் பேரியக்கத்தின் கூட்டம் சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பருத்திக்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரியக்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சிவகாமி, செயலாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் 8 வழிச்சாலை திட்டத்தை அடியோடு ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை மறந்துவிட்டு தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே கொடுத்த வாக்குறுதியை மீறியது போல அவர் பேசி இருப்பது, வாக்களித்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கிறோம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் பேரியக்கத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story