பள்ளி மாணவனை கொன்று புதைத்த வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவனை கொன்று புதைத்த வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 April 2019 4:45 AM IST (Updated: 23 April 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், பள்ளி மாணவனை கொன்று புதைத்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார்(வயது 43). இவர் தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களது இளைய மகன் கிஷோர்(13). இவன் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாட செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி மாலை 5.30 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் கிஷோர் வீட்டிற்கு வந்தான். பின்னர் விளையாட செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றான். அவன் தனது நண்பர்களுடன் வரசித்தி விநாயகர் கோவில் அருகே உள்ள மைதானத்தில் கண்ணாமூச்சி விளையாடினான். அப்போது பாப்பாநகர் விரிவாக்கத்தில் வசித்து வரும் தமிழ்வேந்தன் மகன் அரவிந்த்(22) என்பவர், விளையாட்டு மைதானத்தின் அருகே உள்ள சுற்றுச்சுவர் பின்புறம் நின்று சிகரெட் பிடித்து கொண்டிருந்தார்.

கண்ணாமூச்சி விளையாடிய கிஷோர் மறைந்து கொள்வதற்காக அரவிந்தின் பின்புறம் வந்து மறைந்து கொண்டான். தான் சிகரெட் குடிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்லிவிடுவான் என கூறி கிஷோரை அரவிந்த் அங்கிருந்து விரட்டினார். ஆனால் அவன் அந்த இடத்தை விட்டு செல்லாததால் அவனது தலையில் அரவிந்த் அடித்தார். இதனால் கோபம் அடைந்த கிஷோர், தகாத வார்த்தைகளால் திட்டினான்.

சின்ன பையன் தன்னை திட்டி விட்டானே என ஆத்திரம் அடைந்த அரவிந்த், கிஷோரின் கழுத்தை நெரித்தார். உடனே அவன் மயங்கி கிழே விழுந்தான். அவனது வாயில் இருந்து நுரை வந்ததுடன் மூச்சு வரவில்லை. அவன் இறந்து விட்டதை அறிந்த கிஷோர், அவனது உடலை தனது தோளில் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு அருகே உள்ள காலி மனைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்குள் சென்று மண்வெட்டியை எடுத்து வந்து குழி தோண்டி கிஷோரின் உடலை அதில் போட்டு புதைத்து விட்டார்.

இந்த நிலையில் விளையாட சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவனது தாய் கவிதா, விளையாட்டு மைதானத்திற்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தனது மகன் குறித்து கேட்டார். அதற்கு அவன் வீட்டிற்கு சென்று விட்டதாக சிறுவர்கள் கூறினர். ஆனாலும் அவன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டிற்கு வந்து உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

இவர்களுடன் சேர்ந்து அரவிந்தும், கிஷோரை தேடுவது போல் நடித்தார். இதையடுத்து மகனை காணவில்லை என சிவக்குமார் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பாப்பாநகர் விரிவாக்க பகுதியில் உள்ள சிறுவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை அறிந்த அரவிந்த், தன்னை போலீசார் பிடித்தால் அடிப்பார்கள் என கருதி நாஞ்சிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்து நடந்த விவரத்தை தெரிவித்தார். அவரை, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று அவர் முன்னிலையில் கிஷோரின் உடலை தோண்டி எடுத்தனர். இது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அரவிந்துக்கு இந்திய தண்டனை சட்டம் 302-(கொலை) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 201-(கொலை செய்து தடயத்தை மறைத்தல்) பிரிவின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

Next Story