பவானிசாகரில், தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை தொடர் அட்டகாசம் வாழைகள் நாசம்


பவானிசாகரில், தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை தொடர் அட்டகாசம் வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 23 April 2019 3:15 AM IST (Updated: 23 April 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே கிராமப்பகுதிக்குள் புகுந்து ஒற்றை ஆண் யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

புஞ்சைபுளியம்பட்டி,

பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதேபோல் சம்பவத்தன்று இரவும் ஒற்றை யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பவானிசாகர் கோட்டை கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயியான துரைசாமியின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள வாழைகளை அந்த யானை தின்றும், காலால் மிதித்து நாசம் செய்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த துரைசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது யானை வாழைகளை தின்று கொண்டு இருந்தது. உடனடியாக இதுகுறித்து அக்கம் பக்கத்துக்கு விவசாயிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற விவசாயிகள், தீப்பந்தங்கள் காட்டி ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். எனினும் ஒற்றை யானை காட்டுக்குள் செல்லாமல் வாழைத்தோட்டத்திலேயே சுற்றித்திரிந்தது. பின்னர் ஒற்றை யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்து விவசாய துரைசாமி கூறுகையில், ‘ஒற்றை யானை பவானிசாகர் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனது தோட்டத்தில் புகுந்து 30–க்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்துவிட்டது. அதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது’ என்றார்.


Next Story