பேரையூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
பேரையூர் அருகே எஸ்.கீழப்பட்டி கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ளது, எஸ்.கீழப்பட்டி கிராமம். இங்குள்ள மக்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் சேடபட்டி, ஆண்டிபட்டி வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் எஸ்.கீழப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். மேலும் ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர் குறைந்துபோனதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் கிடைக்காமல் அந்த கிராம மக்கள் பக்கத்து கிராமங்களுக்கு அதிக தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் டி.கல்லுப்பட்டி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று எஸ்.கீழப்பட்டி கிராம மக்கள் பேரையூர்–வத்திராயிருப்பு சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் காலிக்குடங்களை சாலையில் வைத்து குடிநீர் கேட்டு மறியல் செய்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் மறியல் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, எஸ்.கீழப்பட்டி கிராமத்தில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குடிநீருக்காக அலைந்து திரிந்து வருகிறோம். எனவே குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றனர்.