ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம்,
இலங்கையில் கடந்த ஈஸ்டர் திருநாளன்று தேவாலயம் உள்பட 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் சுமார் 300 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பாக புலனாய்வு செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் 24 பேரை இலங்கை போலீசார் கைது செய்தார்கள். மேலும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த விசாரணையில் வெளிவந்த தகவல் அடிப்படையில் இந்தியாவில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் இலங்கையை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் விசைப்படகுகளில் சென்று 24 மணி நேரம் கண்காணித்து வருகிறார்கள்.
இதேபோல் ரெயில் நிலையம், பஸ்நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியிலும் சந்தேகப்படும் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். தனுஷ்கோடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.