தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்,
கடந்த வாரம் 17-ந்தேதி மகாவீர்ஜெயந்தி, 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல், 19-ந்தேதி புனிதவெள்ளி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
அவ்வாறு சொந்த ஊர்களுக்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று விடுமுறை முடிந்து மீண்டும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பினார்கள். பொதுமக்களின் வசதிக்காக சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று அதிகாலை முதலே சிறப்பு பஸ்களில் மக்கள் அதிக அளவில் சென்னை திரும்பினர்.
போக்குவரத்து நெரிசல்
அதிக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஆமைபோல் ஊர்ந்துசென்றன.
இதனால் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து பெருங்களத்தூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சுங்கச்சாவடிகள்
தொடர் விடுமுறை காரணமாக எங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பினோம். தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. வழக்கமான கட்டணத்தை விட சிறப்பு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னைக்கு திரும்பி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அதிக கட்டணத்தில் பயணம் செய்து சென்னை வந்தோம்.
சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் மதுராந்தகம், செங்கல்பட்டு சுங்கச்சாவடிகளில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை ஆமை வேகத்தில் பஸ்கள் வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிந்ததால் அதிகாலை முதலே போக்குவரத்து போலீசார் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கனரக வாகனங்கள் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திருப்பி விடப்பட்டன.
ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்ததால் காலை 10 மணி வரை பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story