குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை தாய், தந்தை, சகோதரர்கள் கைது


குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை தாய், தந்தை, சகோதரர்கள் கைது
x
தினத்தந்தி 23 April 2019 4:15 AM IST (Updated: 23 April 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய தாய், தந்தை, சகோதர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஓன்றியம் அய்யன்பேட்டை ஊராட்சி கந்தப்பர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 62). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு தமிழ் செல்வி (50) என்ற மனைவியும், மோகனவேல் (33), மகேஷ் (29), ரமேஷ் (25) என 3 மகன்களும் உள்ளனர். மகன்கள் மூவரும் பட்டதாரிகள். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.

இதில், மோகனவேல் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் உள்ளூரில் வேலை செய்கின்றனர். இரண்டாவது மகன் மகேஷ் சிங்கப்பூரில் பணிபுரிந்தார். இந்நிலையில், சிங்கப்பூரில் வேலை செய்யும் மகேஷ் அவ்வப்போது அய்யன்பேட்டைக்கு வந்து செல்வார்.

அப்போது மகேஷ் குடித்து விட்டு தனது குடும்பத்தினருடன் தொடர்ந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் பணியாற்றி விட்டு தன் வீட்டிற்கு வந்த மகேஷ், மது குடித்து விட்டு குடிபோதையில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்தபோது தகராறு முற்றியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மணி தனது மகன்கள் மோகனவேல், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து மகேஷை பலமாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். உடனே மகேஷின் உடலை தூக்கி அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் செய்து விட்டு, மகேஷ் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடி உள்ளனர்.

இதுகுறித்து தந்தை மணி வாலாஜாபாத் போலீசில் புகாரும் செய்தார். சிங்கப்பூரில் பணிபுரியும் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகேஷின் உடலை பார்த்து சோதனை செய்தனர். அப்போது மகேஷின் உடல் மற்றும் தலையில் ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்தனர்.

மேலும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், மகேஷின் தந்தை மணி, சகோதரர்கள் மோகன வேல், ரமேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மகேஷை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தந்தை மணி, சகோதரர்கள் மோகனவேல், ரமேஷ் மற்றும் கொலையை மறைக்க உதவிய தாய் தமிழ்செல்வி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

ஒரு குடும்பமே சேர்ந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் அய்யன்பேட்டை பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story