சங்கராபுரம் பகுதியில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
சங்கராபுரம் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதைத்தது. மேலும் இந்த வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதி களிலும் வெயில் சுட்டெரித்தது. மதியம் 3 மணிக்கு பிறகு வெயில் மந்தமாக காணப்பட்டது. இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு வந்து பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது.
இந்த மழை 4.45 மணி வரை நீடித்தது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் சாலையில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதேபோல் புதூர், கடுவனூர், பாக்கம், கானாங்காடு, புதுப்பட்டு, ராவத்தநல்லூர் உள்ளிட்ட பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.15 மணி முதல் 6 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story