திண்டிவனம் அருகே பயங்கரம் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை - 7 பேர் கைது


திண்டிவனம் அருகே பயங்கரம் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை - 7 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2019 4:15 AM IST (Updated: 23 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் காலனியை சேர்ந்தவர் எமகுண்டு மகன் வாசு என்கிற வாசுதேவன்(வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், வாசுதேவனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வாசுதேவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட வாசுதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடந்த அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வாசுதேவன் தனது நண்பரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான மணிகண்டன் மற்றும் பாலா ஆகியோருடன் சேர்ந்து முன்விரோத தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் திண்டிவனம் கோர்ட்டு விடுவித்தது தெரியவந்தது. இதனிடையே மணிகண்டனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாசுதேவன், பாலா ஆகியோர் அவரை விட்டு பிரிந்து தனித்தனியாக சென்றுவிட்டனர்.

அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் வாசுதேவன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். சில மாதங்களில் வாசுதேவன் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத்தொடர்ந்து திருச்சியில் நடந்த வழிப்பறி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த வாசுதேவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மகும்பல் வாசுதேவனை வெட்டிக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் திண்டிவனம் சீனிபாபு, பிரம்மதேசம் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதோடு, கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வாசுதேவன் பெருமுக்கல் விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மணிகண்டனின் தம்பி கனகராஜ் தரப்பினருக்கும், வாசுதேவனுக்கும் இறந்த மணிகண்டனின் நினைவுநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிந்து காணப்பட்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்ததும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அதன்அடிப்படையில் கனகராஜ்(28) உள்பட 16 பேரை தனிப்படை போலீசார் பிடித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கனகராஜ் தனது அண்ணனின் கொலைக்கு பழிக்குபழி வாங்குவதற்காக முருகன் மகன் சுகன்ராஜ்(21), கதிர்வேல் மகன் பிரேம்குமார், சேகர் மகன் சக்திவேல்(23), வேணுகோபால் மகன் ஜானகிராமன்(30), சேட்டு மகன் ஜானகிராமன்(27), மகேஷ் மகன் சரத்குமார்(27) ஆகியோருடன் சேர்ந்து வாசுதேவனை நோட்டமிட்டு, தனியாக இருந்தபோது அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கனகராஜ் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்டதில் கைது செய்யப்பட்ட 7 பேரை தவிர மற்றவர்களை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story