வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களை போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்
ஓட்டு எண்ணும் மையங்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.
சென்னை,
கடந்த 18-ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை, இந்த பாதுகாப்பு நீடிக்கும்.
சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில், தென்சென்னை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மத்திய சென்னை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், இடைத்தேர்தல் நடந்த பெரம்பூர் சட்டமன்ற வாக்குப்பதிவு எந்திரங்களும் சென்னை ராணிமேரி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் ராணிமேரி கல்லூரி ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில், ‘வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு யாரும் செல்லமுடியாது. அந்தப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story