கேரளாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல், வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்
கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற தேர்தலையொட்டி வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம்,
தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் விளங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கு இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. பெரும்பாலும் கேரள மாநிலத்தில் இருந்து அதிக வியாபாரிகள் வந்து அதிக அளவு காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் நேற்று யாரும் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டும் வந்து இருந்தனர். இதனால் சுமார் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
காய்கறிகள் விற்பனை குறைந்ததால் விலை அதிகரித்தது. இதில் கிலோ ரூ.20-க்கு விற்ற சின்னவெங்காயம் நேற்று விலை அதிகரித்து கிலோ ரூ.35-க்கு விற்பனையானது. வியாபாரிகள் வராததால் மார்க்கெட்டு வெறிச்சோடி காட்சி அளித்தது.
Related Tags :
Next Story