மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசம்
தேனி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகின.
தேனி,
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று மாலை 6 மணி வரை மாவட்டத்தில் மொத்தம் 393.6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதன் சராசரி 32.8 மில்லிமீட்டர் ஆகும்.
அதிகபட்சமாக மஞ்சளாறு அணை பகுதியில் 73 மி.மீ., பெரியகுளத்தில் 63 மி.மீ., கூடலூரில் 53 மி.மீ. மழை பெய்துள்ளது. அதுபோல், சோத்துப்பாறையில் 48 மி.மீ., உத்தமபாளையத்தில் 31.6 மி.மீ., வைகை அணையில் 31.2 மி.மீ., வீரபாண்டியில் 37 மி.மீ., ஆண்டிப்பட்டியில் 18 மி.மீ., அரண்மனைப்புதூரில் 15.2 மி.மீ., போடியில் 15.4 மி.மீ., முல்லைப்பெரியாறு அணை பகுதியில் 2.6 மி.மீ., தேக்கடியில் 5.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
இந்த பலத்த மழை காரணமாக தேனி, பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை, கரும்பு விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. தேனி அருகே வரட்டாறு, மதுராபுரி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமாகி உள்ளன. இந்த வாழை மரங்கள் குலை தள்ளி இருந்தது. இன்னும் ஒரு மாத கால கட்டத்தில் வாழைத்தார்கள் வெட்டும் நிலையில் அவை நாசமாகின. அதுபோல் ஏராளமான கரும்புகளும் சாய்ந்தன.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழைக்கு நாசமான பயிர்களை கண்ணீருடன் பார்த்து வேதனைப்பட்டு வருகின்றனர். பாதிப்புகளை முழுமையாக அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ணம் ஏற்பட்டது. இந்த மழையால் உப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் கருகும் நிலையில் இருந்த சோளம், கம்பு ஆகிய பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கம்பம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மா, இலவம், புளியமரம் போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். மேலும் கம்பு, சோளம், எள், மொச்சை போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால் பயிர்கள் கருகி காணப்பட்டன. இந்நிலையில் கம்பத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய சூறைக்காற்றுடன் மழை பெய்தது இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. எனினும் மழை காரணமாக மானாவாரி நிலங்களில் காய்ந்து கிடந்த பயிர்கள் துளிர்விட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story