கஜா புயலில் மின் இணைப்பு துண்டிப்பு: காட்சி பொருளான குடிநீர் தொட்டி கிராம மக்கள் அவதி


கஜா புயலில் மின் இணைப்பு துண்டிப்பு: காட்சி பொருளான குடிநீர் தொட்டி கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 23 April 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

கஜா புயலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் தொட்டி காட்சி பொருளாகி விட்டது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நெம்மேலி ஊராட்சி 3-வது வார்டு கீழத்தெருவில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதில் மின் மோட்டாரை பொருத்தி, அதன் மூலம் குடிநீர் தொட்டியை நிரப்பி, அப்பகுதி கிராம மக்களுக்கு வினியோகம் செய்து வந்தனர்.

பொதுமக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு இந்த குடிநீர் தொட்டியை மட்டுமே நம்பி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி கஜா புயல் வீசியபோது, ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் இரும்பு குழாய்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக மின்மோட்டார் இயங்காததால் அங்கு குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். தண்ணீர் தேவையை சமாளிக்க அப்பகுதியில் குளம், குட்டைகளும் இல்லை. மின் இணைப்பை சீரமைத்து குடிநீர் தொட்டி மூலமாக மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார் இயங்காததால் குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறி விட்டது. எனவே மின் இணைப்பு மற்றும் குழாய்களை சீரமைத்து குடிநீர் வினியோகம் சீராக நடைபெற மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story