பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜவுளி வியாபாரி மீது புகார்; பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜவுளி வியாபாரி மீது புகார்; பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜவுளி வியாபாரி மீது புகார் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை தெற்கு வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 40). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் நேற்று காலை புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:–

நான் இருசக்கர வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறேன். எனது உறவுக்காரர் ஒருவர் ஜவுளி தொழில் செய்து வந்தார். அவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஏலச்சீட்டு போட்டு இருந்தார். அவர் 2 சீட்டுகளாக ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.90 லட்சத்தை ஏலம் எடுத்தார். அதற்கு நான் ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தேன். அதன்பின்னர் அவர் திடீரென தலைமறைவானார்.

அந்த நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.17 லட்சத்து 56 ஆயிரத்து 518 மற்றும் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் ஏலச்சீட்டு எடுத்த எனது உறவுக்காரரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. மேலும், என்னை போலவே பலரையும் அவர் ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

அவருடன், பாதிக்கப்பட்டவர்கள் சிலர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.


Next Story