ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன
சென்னையில் இருந்து ஆந்திரா செல்ல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு சொகுசு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தாம்பரம்,
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு 2 நாள் பயணமாக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன்தினம் சென்னை வந்தார். பின்னர் அவர் சென்னையில் தங்கி நேற்று காலை ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் மீண்டும் சென்னை திரும்பினார். இதற்காக தாம்பரம் ரெயில்வே பணிமனையில் 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு சொகுசு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த ரெயில் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு, 4 மணிக்கு திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் துணை ஜனாதிபதி மற்றும் முக்கியபிரமுகர்கள் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் காலை 8.20 மணிக்கு தான் சிறப்பு ரெயில் ஆந்திரா நோக்கி புறப்பட்டு சென்றது.
திரிசூலம் ரெயில் நிலையத்தில் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டு இருந்ததால் தாம்பரம் - எழும்பூர் இடையே ஒரே தண்டவாளத்தில் இரு மார்க்கமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த முத்துநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story