ஊட்டி அருகே, ஜெர்சி பசு மாடுகளை கடத்தி சென்ற வாலிபர்கள் கைது - கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மடக்கினர்


ஊட்டி அருகே, ஜெர்சி பசு மாடுகளை கடத்தி சென்ற வாலிபர்கள் கைது - கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மடக்கினர்
x
தினத்தந்தி 24 April 2019 3:45 AM IST (Updated: 24 April 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே ஜெர்சி பசு மாடுகளை கடத்தி சென்ற வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஊட்டி,

ஊட்டி அருகே அட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் புட்ராஜ், விவசாயி. இவர் உயர் ரக ஜெர்சி மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி அவரது 2 ஜெர்சி பசு மாடுகள் அதே கிராமத்தில் புல்வெளியில் மேய்ந்து கொண்டு இருந்தன. அந்த 2 மாடுகள் சினையாக இருந்தது. அப்போது சரக்கு வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள், மேய்ந்து கொண்டிருந்த 2 பசு மாடுகளை வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றனர். பசு மாடுகள் வழக்கமாக மாலையில் வீடு திரும்பி விடும். ஆனால், அன்று வீடு திரும்பாததால், புட்ராஜ் அட்டுக்கொல்லை கிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேடி பார்த்தார். ஆனால், பசுமாடுகளை எங்கும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த புட்ராஜ் தனது உயர் ரகமான 2 ஜெர்சி மாடுகளை காணவில்லை என்றும், அவை விலை உயர்ந்த மாடுகள் என்பதால் கடத்தி சென்று இருக்கலாம் என்றும் கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் என்பதால், பெரும்பாலான போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதனால் சரியாக விசாரணை நடத்த முடியவில்லை. இதற்கிடையே பர்லியார் சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் சரக்கு வாகனம் ஒன்று செல்வதும், அதில் பசுமாடு இருப்பதும் தெரியவந்தது. அந்த கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கேத்தி போலீசார் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சரக்கு வாகனம் நிற்பதை கண்டு பிடித்தனர். அங்கு விசாரணை நடத்திய போது, கடத்தி வரப்பட்ட 2 பசு மாடுகள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாடுகளை கடத்தி வந்த 2 நபர்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி பசு மாடுகளை கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக சிவசங்கரன் (வயது 24), பரந்தராமன் (22) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பசு மாடுகள் மீட்கப்பட்டன.

கைதான 2 பேர் இந்த சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டார்களா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

Next Story