தேன்கனிக்கோட்டை அருகே, கூலித்தொழிலாளி அடித்துக்கொலை? 2 பேரிடம் போலீசார் விசாரணை


தேன்கனிக்கோட்டை அருகே, கூலித்தொழிலாளி அடித்துக்கொலை? 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 April 2019 4:30 AM IST (Updated: 24 April 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த மரக்கட்டா பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணன் (39), ராமகிருஷ்ணன் (48), ஆகியோருக்கும் இடையே கடந்த 21-ந் தேதி இரவு தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர், சங்கரை அடித்து உதைத்தனர். ஏற்கனவே சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சரவணன், ராமகிருஷ்ணன் வயிற்றில் தாக்கியதால் வயிற்று வலி அதிகமானது. இதனால் கடந்த 22-ந் தேதி அவர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை டீ குடிப்பதற்காக சங்கர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவிற்கு அருகே திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கர் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடித்ததால் சங்கர் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story