இலங்கையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்செந்தூரில் மீனவர்கள் மவுன ஊர்வலம்-உண்ணாவிரதம்
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருச்செந்தூரில் மீனவர்கள் மவுன ஊர்வலம்-உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்,
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 320-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தொடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில், திருச்செந்தூரில் நேற்று மாலையில் மவுன ஊர்வலம் நடந்தது.
திருச்செந்தூர் தேரடி திடலில் இருந்து திரளான மீனவர்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு, கீழ ரத வீதி வழியாக அமலிநகர் அமலி அன்னை ஆலயத்துக்கு சென்றனர். தொடர்ந்து ஆலயத்தில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதில் ஊர் தலைவர்கள் சேகர் (மணப்பாடு), செல்வராஜ் (அமலிநகர்), தொம்மை (ஆலந்தலை), பங்குத்தந்தை ரவீந்திரன் மற்றும் மணப்பாடு, ஆலந்தலை, திருச்செந்தூர் அமலிநகர், வீரபாண்டியன்பட்டினம், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பைக் கண்டித்தும், அதில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலயம் அருகில் நேற்று காலை முதல் மாலை வரையிலும் மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர் மாலையில் ஆலந்தலை திரு இருதய அற்புத கெபியில் உதவி பங்குத்தந்தை ஜான்சன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருச்செந்தூர், காயல்பட்டினம் கொம்புத்துறை, சிங்கித்துறை, புன்னக்காயல், ஆலந்தலை, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. காயல்பட்டினம் கொம்புத்துறையில் மீனவர்கள் தங்களது வீடுகள், நாட்டுப்படகுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
Related Tags :
Next Story