மதுரையில் தகராறை விலக்க சென்ற கொத்தனார் அடித்துக்கொலை; சகோதரர்களுக்கு வலைவீச்சு


மதுரையில் தகராறை விலக்க சென்ற கொத்தனார் அடித்துக்கொலை; சகோதரர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தகராறை விலக்க சென்ற கொத்தனாரை அடித்துக்கொன்ற சகோதரர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மதுரை,

மதுரை எல்லீஸ்நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசைதம்பி (வயது 45), கொத்தனார். நேற்று மாலை இவர் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரது உறவினர் சுந்தரிடம் 2 பேர் தகராறு செய்து அவரை சரமாரியாக அடித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த ஆசைதம்பி விரைந்து சென்று அவர்களை விலக்கி விட்டார்.

உடனே அவர்கள் ஆத்திரத்தில் ஆசைதம்பியை கீழே தள்ளிவிட்டு, அவரது நெஞ்சில் காலால் மிதித்து தாக்கினர். இதில் மயக்கம் அடைந்த அவரை அருகில் இருந்தவர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் ஆசைதம்பி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியை சேர்ந்த அழகப்பன் மகன்கள் சின்னமுத்துபாண்டி, ராஜபாண்டி என தெரியவந்தது. அதை தொடர்ந்து சகோதரர்களான அவர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story