கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மதுரை,
மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் முத்து என்ற துப்பாக்கி முத்து (வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (33). இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். அடிக்கடி மது அருந்தி விட்டு, தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2013–ம் ஆண்டு முத்துவின் வீட்டுக்கு அருகில் நாகராஜன் மது அருந்தியுள்ளார். இதை பார்த்த முத்து, குடியிருப்பு பகுதியில் மது அருந்த கூடாது என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து முத்துவின் தலையில் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்துபோனார். இந்த கொலை சம்பவம் குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கின் விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. அப்போது நாகராஜன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு தீர்ப்பளித்தார்.