கோவை அருகே விசுவாசபுரத்தில், மின்கம்பம் மீது லாரி மோதி விபத்து - 6 மணி நேரம் மின்வினியோகம் பாதிப்பு


கோவை அருகே விசுவாசபுரத்தில், மின்கம்பம் மீது லாரி மோதி விபத்து - 6 மணி நேரம் மின்வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே விசுவாசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 6 மணி நேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

சரவணம்பட்டி,

கோவையை அடுத்த சரவணம்பட்டி சத்தி மெயின் ரோடு விசுவாசபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு கோவை மாவட்டத்தில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் 32 சக்கர கனரக வாகனங்கள் மூலம் தினந்தோறும் இரும்பு ராடுகளை கொண்டு செல்லப்படும்.

இந்த நிலையில் நேற்று காலை குடோனுக்கு இரும்பு ராடுகள் இறக்க ஒரு லாரி வந்தது. அந்த லாரி குடோனுக்கு முன்பு இருந்த மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து மின்கம்பம் சத்தி சாலையில் சரிந்து விழுந்தது. இதில் மின்கம்பத்தில் இருந்த ஒயர்கள் துண்டிக்கப்பட்டன. அந்த நேரத்தில் சத்தி சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால் விசுவாசபுரம், கார்த்திக்நகர், ரெவின்யூ நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே மின்கம்பத்தை சரிசெய்வதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக அந்த தனியார் இரும்பு குடோன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரி ரத்தினகுமார் தலைமையில் மின் ஊழியர்கள் பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு கிரேன் உதவியுடன் புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதியடைந்தனர்.

Next Story