சேலத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை - கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது


சேலத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை - கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை பாபு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). கட்டிட தொழிலாளி. இவருக்கு பெருமாயி, மாதம்மாள் என 2 மனைவிகளும், ஆறுமுகம், மணிகண்டன் என 2 மகன்களும் உள்ளனர். ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் குடித்துவிட்டு தெருவில் நின்று தகாத வார்த்தைகளை பேசி சத்தம் போடுவதுடன், கேலி கிண்டல் செய்தும் வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மது குடித்துவிட்டு வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தார். அப்போது அவர் சினிமா பாடல்களை பாடியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த முரளி (39) என்பவரின் மனைவி நிஷா (32) தெருவில் நடந்து சென்றார். அப்போது ஆறுமுகம் அவரை பார்த்து பாட்டு பாடியதுடன், கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை நிஷா தனது வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த முரளி, அவருடைய தம்பி சரவணன், தாய் மாதம்மாள் ஆகியோர் சென்று ஆறுமுகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தகராறு முற்றவே அவர்கள் கட்டையால் ஆறுமுகத்தை அடித்துள்ளனர். இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதைப்பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஆறுமுகம் வீட்டில் தூங்க சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை 6.30 மணியாகியும் அவர் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் ஆறுமுகத்தை எழுப்பி பார்த்தனர். அந்த சமயத்தில் தான் ஆறுமுகம் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 4 பேர் கட்டையால் அடித்ததால் தான் ஆறுமுகம் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை தொடர்பாக முரளி, நிஷா, சரவணன், மாதம்மாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story