உதயநத்தம் காத்தாயி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


உதயநத்தம் காத்தாயி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 April 2019 3:31 AM IST (Updated: 24 April 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

உதயநத்தம் காத்தாயி அம்மன் கோவிலில் நடந்த தீமிதிதிருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாத திருவிழா 8 நாட்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காத்தாயி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது.

இதில் தீ மிதிப்பதற்காக விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் சோழமாதேவி, தினக்குடி, கோடாலி, கோடாலி கருப்பூர், சிலால், கண்டியன்கொள்ளை, தேவமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.


Next Story