வடலூர் அருகே, தே.மு.தி.க. பிரமுகர் கொலை வழக்கில் நண்பர் கைது


வடலூர் அருகே, தே.மு.தி.க. பிரமுகர் கொலை வழக்கில் நண்பர் கைது
x
தினத்தந்தி 24 April 2019 4:30 AM IST (Updated: 24 April 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

வடலூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கொலை வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

வடலூர்,

வடலூர் அருகே உள்ள ராசாக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 39). இவர், தே.மு.தி.க.வில் ஊராட்சி செயலாளராக இருந்தார். கடந்த 19-ந் தேதி இரவு தனது தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் தூங்கிய செந்தில்குமார், ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செந்தில்குமாரை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ்குமார்(42) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராசாகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் எழில்மேகத்திடம் சந்தோஷ்குமார் சரண் அடைந்து, செந்தில்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் எழில்மேகம், சந்தோஷ்குமாரை வடலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் செந்தில்குமாரும், சிறுவயது முதல் நண்பர்களாக பழகி வந்தோம். எங்களுக்கிடையே பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று இரவு மோட்டார் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தேன். பின்னர் சுத்தியலை அதே பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் வீசிவிட்டு, புதுச்சேரிக்கு சென்று தலைமறைவானேன். ஆனால் போலீசார் தீவிரமாக தேடியதால் சரணடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

Next Story