திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 24 April 2019 4:49 AM IST (Updated: 24 April 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலைக்கோட்டை,

திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை பூச்சொரிதல் விழாவும், இரவு 7 மணிக்கு மேல் அம்மன் புஷ்பரதத்தில் எழுந்தருளி மலைக்கோட்டையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 14-ந்தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும், 15-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக காலை 8 மணிக்கு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது பக்தர்கள் வழி நெடுக தேங்காய் உடைத்தும், மாவு வைத்தும் வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கினர். தேரோட்டத்தின் போது, வெயிலை சமாளிக்க பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. மேலும் கலர் பொடிகளை பூசி பக்தர்கள் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தேர் மலைக்கோட்டையை சுற்றி வந்து நிலையை வந்தடைந்தது.

வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு ஆற்றுக்கு வேல் புறப்படுதல், அன்று இரவு 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து சப்பாணி கருப்பண்ணசாமியும், மதுரைவீரன் சுவாமியும் குதிரை வாகனத்தில் வீதிஉலா வருதல் நடைபெறும். பின்னர் அன்று இரவு 9 மணிக்கு அபிஷேகமும், சுத்த பூஜையும் நடை பெறும்.

இதைதொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு பெரிய பூஜையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

Next Story