திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 April 2019 4:53 AM IST (Updated: 24 April 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர்,

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள பல இடங்களில் ‘அணுகு சாலை’ அமைக்கப் படாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குழு அமைத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவு படி ‘அணுகு சாலை’ அமைக்க சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளுக்கு மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

இதற்கிடையே நேற்று காலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தஞ்சை நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து கடைகளின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், கூரைகள் போன்றவற்றை வெல்டிங் எந்திரங்கள் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அகற்றினார்கள்.

அப்போது, வியாபாரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story