பெலகாவி அருகே வாக்குச்சாவடியில், பணியில் ஈடுபட்டு இருந்த அரசு ஊழியர் மாரடைப்பால் சாவு
பெலகாவி அருகே வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்த அரசு ஊழியர் மாரடைப்பால் உயிர் இழந்தார். அவருக்கு இன்னும் 2 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இந்த பரிதாபம் நடந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று பெலகாவி, பல்லாரி, விஜயாப்புரா உள்பட 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெலகாவி மாவட்டம் ஹூக்கேரி தாலுகா கனவிகட்டே கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரசு ஊழியரான சுரேஷ் பீமப்பா(வயது 28) என்பவர் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இவரது சொந்த ஊர் ஹூக்கேரி தாலுகா பாட்சாவாடி கிராமம் ஆகும். இவர் அதே கிராமத்தில் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த சுரேஷ் திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்து விட்டார். சுரேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அதனால் அவர் உயிர் இழந்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரசு ஊழியரான சுரேசுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 வீட்டு பெற்றோரும் பேசி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். அதன்படி சுரேசுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வருகிற 26-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் சுரேஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தது பாட்சாவாடி கிராமத்தில் பெரும் சோகத்ைத ஏற்படுத்தியது.
இதுபோல, பல்லாரி மாவட்டம் சிருகுப்பா அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் அரசு பள்ளி ஆசிரியரான திப்பேசாமி (56) என்பவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனடியாக திப்பேசாமி ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். திப்பேசாமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story