கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் மே மாதம் 23-ந்தேதிக்கு பிறகு முதல்-மந்திரி ஆவேன் எடியூரப்பா சூசகம்


கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் மே மாதம் 23-ந்தேதிக்கு பிறகு முதல்-மந்திரி ஆவேன் எடியூரப்பா சூசகம்
x
தினத்தந்தி 24 April 2019 12:02 AM GMT (Updated: 24 April 2019 12:02 AM GMT)

தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், மே மாதம் 23-ந்தேதிக்கு பிறகு தான் முதல்-மந்திரி ஆவேன் என்றும் எடியூரப்பா சூசகமாக தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா,

கர்நாடகத்தில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக கடந்த 18-ந்தேதி பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் நேற்று 2-வது கட்டமாக சிவமொக்கா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவருமான எடியூரப்பா நேற்று காலை சிகாரிப்புரா தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 134-ல் வாக்களித்தார். அவருடைய மகன்களான ராகவேந்திரா (சிவமொக்கா பா.ஜனதா வேட்பாளர்), விஜயேந்திரா ஆகியோரும் எடியூரப்பாவுடன் வந்து வாக்களித்தனர்.

முன்னதாக வாக்களிக்கும் முன்பு எடியூரப்பா தனது மகன்களுடன் சிகாரிப்புராவில் உள்ள பழைய உச்சராயசுவாமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் பா.ஜனதா கட்டாயம் வெற்றி பெறும். சிவமொக்கா தொகுதியில் எனது மகனை தோற்கடிக்க முதல்-மந்திரி குமாரசாமியும், தேவேகவுடாவும் சதி செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் அதிகளவு பணத்தை வாரி இறைத்துள்ளனர். ஆனாலும் எனது மகன் ராகவேந்திரா சுமார் 1½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் கர்நாடகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். கூட்டணியில் தானாக பிளவு ஏற்படும். இதில் தனி கவனம் செலுத்த வேண்டியதில்லை. நாற்காலி சண்டை நடக்கும். அரசு தானாக கவிழும்.

மே மாதம் 23-ந்தேதி வரை மட்டுமே நான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பேன். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். அவர்கள் யார்-யார் என்று இப்போது சொல்லமாட்டேன்.

2-வது கட்டமாக தேர்தல் நடந்துள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 12-ல் பா.ஜனதா வெற்றி பெறும். கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே மாதம் 23-ந்தேதி வரை மட்டுமே தான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார். இதனால், மே மாதம் 23-ந்தேதிக்கு பின்னர் அவர் முதல்-மந்திரி ஆவதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

Next Story