கோடைகேற்ற குளு குளு மலை பயணம்
இந்த மலைப்பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டவில்லை
கோடை காலத்தில் காணவேண்டிய பகுதி என்பதை நமக்கு தன் பெயரின் மூலம் உணர்த்தும் ஒரு பகுதி உண்டென்றால் அது கொடைக்கானல்தான். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம். அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கிய மலைப்பகுதி, ஏழைகளின் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.
கோடை காலத்தில் கடும் வெப்பம் மற்றும் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க பிரிட்டிஷார் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் கண்டுபிடித்த இடம்தான் கொடைக்கானல். இம்மலைப்பிரதேசம் 1845-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு பாளையர் எனும் மலைவாழ் மக்கள் மட்டுமே பூர்வகுடிகளாக உள்ளனர். இன்றளவும் இந்த மலைப்பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டவில்லை. ஆனால் இது பெரிதும் நம்பியிருப்பது சுற்றுலாப் பயணிகள் மூலமான வருமானத்தைத்தான்.
திண்டுக்கல்லிலிருந்து 95 கி.மீ. தூரத்திலும், மதுரையிலிருந்து 117 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 528 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இப்பகுதி. மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல். கடல் பரப்பிலிருந்து 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கோக்கர்ஸ் வாக், காஸ்கேட், கொடைக்கானல் ஏரி ஆகியன பார்த்து ரசிக்க வேண்டிய முக்கியமான பகுதிகளாகும்.
செயற்கையாக உருவாக்கப்பட்ட நட்சத்திர வடிவிலான ஏரி மிக அழகானது. இந்த ஏரியில் படகு சவாரி மிகவும் ரம்மியமானது. இது 60 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. 1863-ம் ஆண்டு அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் ஹென்றி லெவின்ஞ் என்வரால் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. ஏரியைச் சுற்றிலும் அமைந்துள்ள அழகிய பள்ளத்தாக்கு பகுதிகள் காண்பதற்கு மிகவும் இனியமையானதாக இருக்கும். துடுப்புப் படகுகள் மூலமும், பெடல் படகுகள் மூலமும் இந்த ஏரியைச் சுற்றி வரலாம்.
அதேபோல ஏரியைச் சுற்றிலும் சைக்கிளில் சுற்றி வருவதை சிறியவர்கள் முதல் பெரியவர்களும் பெரிதும் விரும்புவர். கோடையிலும் குளிர் நிலவும். இதனால் இங்கு கம்பளி ஸ்வெட்டர், போர்வை, குல்லாக்கள் ஆகியன விற்பனை செய்யும் கடைகளும் உண்டு. ஸ்வெட்டர் வாங்க மறந்து போனவர்கள் இங்கு வாங்கிக் கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பது இங்குள்ள பிரையன்ட் பூங்கா. ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்காவை சுற்றிப் பார்த்து ரசிக்கவே ஒரு நாள் போதாது. 1908-ம் ஆண்டு வனத்துறை அதிகாரி ஹெச்.டி. பிரையன்ட் என்பவரால் இது உருவாக்கப்பட்டதால் அவரது பெயராலேயே இந்த பூங்கா அழைக்கப்படுகிறது.
இங்கு 325 வகையான மரங்கள், விதவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கலாம். ஏறக்குறைய 740 வகையான ரோஜா மலர்களை இங்கு பார்த்து ரசிக்க முடியும். ஒவ்வொரு கோடையிலும் இங்கு மலர் கண்காட்சி நடைபெறும். இதைக் காணவே பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வருவர். குழந்தைகள் விளையாடுவதற்கென தனி பகுதியும், கண்ணாடிக் குடில் பகுதியும் இங்கு அமைந்துள்ளன.
இதுதவிர தூண் பாறை (பில்லர் ராக்), வெள்ளி நீர் வீழ்ச்சி, குணா குகை, மொயிர் பாயிண்ட், கரடி சோழா அருவி, பம்பார் வீழ்ச்சி, செண்பகனூர் அருங்காட்சியகம், டால்பின் மூக்கு பகுதி, பெருமாள் முனை, பேரிச்சம் ஏரி, குக்கல் குகை உள்ளிட்ட பகுதிகளும் நிச்சயம் பார்க்க வேண்டிய பகுதிகளாகும்.
Related Tags :
Next Story