நாகர்கோவிலில் ‘ஆட்டிசம்’ குறித்த விழிப்புணர்வு பேரணி மாணவ– மாணவிகள் பங்கேற்பு


நாகர்கோவிலில் ‘ஆட்டிசம்’ குறித்த விழிப்புணர்வு பேரணி மாணவ– மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 3:17 PM GMT)

நாகர்கோவிலில் மாணவ– மாணவிகள் பங்கேற்ற ‘ஆட்டிசம்‘ குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாகர்கோவில்,

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2–ந் தேதி ஆட்டிசம் (புறஉலக சிந்தனை குறைபாடு) விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிச விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி சார்பில் ஆட்டிச விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி தலைமை தாங்கினார். நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


எஸ்.எல்.பி. பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி கோர்ட்டு ரோடு, வேப்பமூடு சந்திப்பு, கேப் ரோடு வழியாக கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவர் செந்தி அரசி, டாக்டர்கள் ராஜபாண்டி, ஸ்ரீலதா மற்றும் கல்லூரி மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவ– மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வந்தனர். அவற்றில் “ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, அது ஒரு குறைபாடு, ஆட்டிசம் நோயை சரிசெய்யலாம்“ என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

பின்னர் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சல்யதந்திர மருத்துவத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Next Story