ஆப்பக்கூடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
ஆப்பக்கூடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. கடந்த 4 நாட்களாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழையாகவும், லேசான மழையாகவே பெய்து வருகிறது. அதன்படி அந்தியூர் பகுதியிலும் வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஆப்பக்கூடலில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12 மணி வரை பலத்த மழையாக பெய்தது. அதன்பின்னர் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இதேபோல் வேம்பத்தி, வெள்ளாளபாளையம், கூலி வலசு ஆகிய பகுதிகளிலும் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது.
பலத்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் கதலி, செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், பூவன் போன்ற வாழைகளை சாகுபடி செய்திருந்தோம். இந்த வாழைகள் அனைத்தும் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் வாழைகள் சாய்ந்துவிட்டன. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு நஷ்டஈட்டு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதேபோல் நம்பியூர், வரட்டுப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 1 மணி முதல் 2 மணி வரை பலத்த மழை பெய்தது.