நிதி நிறுவனத்தில் வீட்டை ரூ.35 லட்சத்திற்கு அடகு வைத்து மோசடி கணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு


நிதி நிறுவனத்தில் வீட்டை ரூ.35 லட்சத்திற்கு அடகு வைத்து மோசடி கணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 6:46 PM GMT)

மனைவியின் கையெழுத்தை போலியாக போட்டு நிதி நிறுவனத்தில் வீட்டை ரூ.35 லட்சத்திற்கு அடகு வைத்து மோசடி செய்த கணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் ஜலீல் அப்பாஸ். இவரது மனைவி ராபியாகனி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜலீல் அப்பாஸ் தொழில் தொடங்குவதற்கு அவரது மனைவியின் தாய்வீட்டு சீதனமான வீட்டை அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்று தருமாறு ராபியாகனியிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் ராபியாகனி அவருக்கு சொந்தமான வீட்டை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்று அதனை ஜலீல் அப்பாசிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜலீல் அப்பாஸ், நிதி நிறுவன மேலாளருடன் இணைந்து தனது மனைவி ராபியாகனியின் கையெழுத்தை போலியாக போட்டு அவரது மனைவிக்கு தெரியாமலேயே மேலும் ரூ.35 லட்சம் பெற்றுள்ளார்.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராபியாகனிக்கு நிதி நிறுவனத்திலிருந்து கடன் தொகை செலுத்த வில்லை. இதனால் வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சியடைந்த ராபியாகனி, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது தனது கணவர் தனது கையெழுத்தை போலியாக போட்டு நிதி நிறுவன மேலாளருடன் சேர்ந்து ரூ.35 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ராபியாகனி தனது உறவினர்களுடன் சென்று புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து ராபியாகனி புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.

இதையடுத்து நீதிபதி, ஜலீல் அப்பாஸ் மற்றும் நிதி நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு ராபியாகனி தனது உறவினர்களுடன் வந்தார். அவர் போலீசாரிடம் மோசடி குறித்து விரைந்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனு கொடுத்தார்.

Next Story