பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘ஆடியோ’ வெளியிடுவேன் வக்கீல் பேட்டி


பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘ஆடியோ’ வெளியிடுவேன் வக்கீல் பேட்டி
x
தினத்தந்தி 24 April 2019 10:15 PM GMT (Updated: 24 April 2019 6:53 PM GMT)

பெரம்பலூரில், பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘ஆடியோ‘ வெளியிடுவேன் என்று வழக்கு தொடர்ந்த வக்கீல் கூறினார்.

பெரம்பலூர்,

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு கும்பல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீடியோ எடுத்தும் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் வேலைவாய்ப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக தங்களை நாடிவரும்போது ஆசைவார்த்தை கூறி, அவர்களை முக்கிய பிரமுகர்கள் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் கொடுமை செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தலிடம், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி, மிரட்டி அ.தி.மு.க. பிரமுகர், போலி பத்திரிகையாளர் மற்றும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதை வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையை அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் புகார்தாரர் வக்கீல் அருள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் வக்கீல் அருள் நிருபர்களிடம் கூறுகையில், புகார் சம்பந்தமாக ஆதாரங்களையும், ஆடியோவையும் தருமாறு போலீசார் என்னிடம் கேட்டனர். இதுதொடர்பாக, கடந்த 21-ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆதாரங்களை தரமுடியாது என்றேன். பின்னர், தான் வைத்திருந்த முக்கிய ஆதாரங்களில் ஒன்றான செல்போன் ஆடியோவை போலீசார் முன்னிலையில் சில நிமிடங்கள் ஒலிபரப்பினேன். வெள்ளிக்கிழமைக்குள் (நாளைக்குள்) சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களுடன் அவர்கள் பேசிய செல்போன் ஆடியோவை வெளியிடுவேன். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து புகார் கொடுப்பேன். இந்த வழக்கை பெரம்பலூர் போலீசார் முறையாக விசாரிக்கவில்லையென்றால், சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்றார்.

Next Story