பூந்தமல்லி அருகே கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை, பொதுமக்கள் வலியுறுத்தல்


பூந்தமல்லி அருகே கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை, பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 April 2019 4:00 AM IST (Updated: 25 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பான்சத்திரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பாழடைந்த இந்த குளத்தை பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டது.

மேலும் அதனை சுற்றி நடைபாதையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் உள்ளாட்சி பதவிக்காலம் முடிந்தவுடன் இதில் சில பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் முறையாக இந்த கோவில் குளம் தூர்வாரப்படாததாலும், கழிவு நீர் கலப்பதாலும் தற்போது இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் காசிக்கு இணையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. காசிக்கு சென்றால் என்ன நன்மை கிடைக்குமோ? அந்த நன்மைகள் அனைத்தும் இந்த கோவிலில் கிடைக்கும். இந்த கோவிலின் குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டு முறையாக பராமரித்து கரைகள் பலப்படுத்தி நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்த கோவில் குளத்தில் நீர் இருக்கும் வரை இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு அடையாமல் சீராக இருந்தது. பொதுமக்களுக்கும் தண்ணீர் எளிதாக கிடைத்து வந்தது. தற்போது இந்த குளத்தில் நீர் இல்லாததால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுமார் 400 அடி முதல் 600 அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் கிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழலும் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதே கோவிலுக்கு சொந்தமான 2 குளத்திலும் நேரடியாக கழிவுநீர் கலப்பது தான். இந்த குளத்திற்கு அருகில் உள்ள மற்றொரு குளத்தில் அதிக அளவில் கழிவு நீர் கலந்து விடுகிறது. மழை நீர் செல்ல அமைக்கப்பட்ட கால்வாய் வழியாக கழிவு நீர் இந்த கோவில் குளத்தில் கலப்பதால் தற்போது கழிவுநீர் குளமாக மாறி உள்ளது.

இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மழைக் காலங்களில் பெய்யும் மழைநீர் இந்த குளத்தில் தேங்குவதில்லை. தற்போது கோடை காலம் என்பதால் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, கழிவு நீர் வராமல் தடுத்து வரும் காலங்களில் சுத்தமான தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுத்தால் நிலத்தடி நீர் பாதிக்காத வகையில் இருக்கும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மிக அருகில் இருக்கும் எங்கள் பகுதி தற்போது நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீருக்கே அல்லல்படும் நிலை ஏற்பட்டு உள்ளது வருந்தக்கூடிய விஷயமாக உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story