போச்சம்பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு போலீசார் பேச்சுவார்த்தை


போச்சம்பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு போலீசார் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் தர்மபுரி-ஊத்தங்கரை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம், தனியார் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தையொட்டி தனியார் செல்போன் நிறுவனம் கோபுரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கிராமமக்கள் அந்த பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த பகுதியில் தென்னை மரங்கள் மற்றும் கீற்றுக்கொட்டகை அதிகம் உள்ளதால் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் செல்போன் கோபுரம் அமைத்தால் அதிக கதிர்வீச்சின் காரணமாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தனியார் செல்போன் கோபுர நிர்வாகிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story