தஞ்சை மாவட்டத்தில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


தஞ்சை மாவட்டத்தில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 7:30 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதி அணை திறக்கப்படுவது வழக்கம். நெல் சாகுபடியை தவிர வாழை, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் அறுவடை செய்யப்பட்ட இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உளுந்து, எள், பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

சித்திரை பட்டத்தில் உளுந்து சாகுபடி பணியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை பகுதியில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் உளுந்து சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ஆறுகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. ஏரி, குளங்களிலும் தண்ணீர் இல்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் தான் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறோம். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. சூரக்கோட்டை பகுதியில் 400 அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது. இதனால் தண்ணீர் குறைவாக தான் கிடைக்கிறது.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் 1 மணிநேரத்தில் தண்ணீர் பாய்ச்சி முடித்துவிடலாம். ஆனால் தண்ணீரின் வேகம் குறைவாக இருப்பதால் 3 முதல் 4 மணிநேரம் ஆகிறது. முதல் தண்ணீரிலேயே உளுந்து முளைக்க தொடங்கி விடும். 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும். மழை பெய்தால் நன்றாக இருக்கும். 3 மாதத்தில் உளுந்து அறுவடைக்கு தயாராகிவிடும் என்றனர்.

Next Story